குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார வாகனத்திற்கு அனுமதி மறுத்தது தான்தோன்றித்தனமான செயல் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

நாகர்கோவில், ஜன.20: குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தான்தோன்றித்தனமான செயலாகத்தான் பார்க்க முடியும் என்று தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கென கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததின் அடிப்படையில், மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று ரீத்தாபுரம் முதல்நிலை பேரூராட்சியில்  ரூ.30 லட்சம் மதிப்பில் ஷாஜன் மஹால் முதல் மேல் ரீத்தாபுரம் வரை தார்சாலை அமைக்கும் பணி, கல்லுக்கூட்டம் பேரூராட்சி வேம்படிவிளை செல்லும் சாலை ரூ.30 லட்சம் செலவில் 700 மீட்டர் கருந்தளம் அமைக்கும் பணி, மணவாளக்குறிச்சி பேரூராட்சி சக்கப்பற்று சால்வேசன் ஆர்மி சர்ச் முதல் பெரியகுளம் ஏலா செல்லும் சாலை ரூ.11 லட்சம் செலவில் 200 மீட்டர் அலங்கார ஒடு பதிக்கும் பணி, வெள்ளிமலை பேரூராட்சி பகுதியில் கல்லடிவிளை சிவந்த மண் வழியாக முட்டம் செல்லும் சாலை ரூ.18 லட்சம் செலவில் 200 மீட்டர் தூரம் சீரமைக்கும் பணி, திங்கள்நகர் பேரூராட்சியில்  ரூ.20 லட்சம் செலவில் வாடிவிளை குளத்தன்கரை முதல் குருசடி வரை 400 மீட்டர் தூரம் இன்டர்லாக்கிங் பேவர்பிளாக் அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

மேலும் நெய்யூர் பேரூராட்சி முக்காடு முதல் கடம்பவிளை செல்லும் சாலை ரூ.17 இலட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி, வில்லுக்குறி பேரூராட்சி பரசேரி மெயின் ரோடு முதல் சுடுகாடு செல்லும் சாலையில் ரூ.16.30 லட்சம் செலவில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. குளச்சல் நகராட்சி சார்பில் வெள்ள நிவாரண நிதியில் தற்காலிக நிவாரண ஒதுக்கீட்டின் கீழ் ரூ.22.40 லட்சம் மதிப்பில் 800 மீட்டர் துறைமுகம் செல்லும் சாலை சீரமைத்தல் மற்றும் தார்சாலை அமைக்கும் பணி, மண்டைக்காடு பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.85 லட்சம் செலவில் 400 மீட்டர் நடுவூர்க்கரை சிவசக்தி கோவில் முதல் கொழிஞ்சிவிளை செல்லும் சாலை கருந்தளம் அமைக்கும் பணி மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணி, என மொத்தம் ₹2.49 கோடி மதிப்பிலான சாலைப் பணிதொடக்கி  வைக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:  வேலுநாச்சியார், வஉசி அல்லது பாரதியார் இவர்களை தெரியாது என்று வடநாட்டவர் கூறினால் அது அவர்களின் விதி. சுதந்திர போராட்டத்திற்காக, இந்த நாட்டை காப்பதற்காக வலுவாக காலூன்றி பணியாற்றிவர்களில் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வேண்டும், அவர்கள் என்ன கூறியிருக்க வேண்டும் என்றால் தெரியாமல் நிராகரிப்பு ஆகிவிட்டது, அதனை சேர்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு சேர்ப்பது பெரிய விஷயம் ஒன்றும் அல்ல. தமிழகத்தில் இருந்து சென்ற அலங்கார வாகனத்தை அனுமதிப்பதில் என்ன பிரச்னை, இது அப்பட்டமாக, தான்தோன்றித்தனமாக வேண்டுமென்றே செய்கின்ற செயலாகத்தான் பார்க்க முடியும்.

ஒரு சாரார் செய்தால் குற்றமாகவும், ஒருசாரார் செய்தால் அது கருத்து சுதந்திரம் என்றும் ஒருசாரார் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து ரூ.200 கோடியில் சாலை பணிகள் தொடக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  இன்னும் பல்வேறு பிரச்னைகள் இருப்பது உண்மை. ஏனெனில் தொடர் மழை, கடந்த 10 ஆண்டுகாலமாக மாவட்டம் புறக்கணிப்பு, இவற்றை எல்லாம் தாண்டி பல சாலைகளை சீரமைக்க வேண்டியுள்ளது.  மலையோர பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில்  கவனம் செலுத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்போது அந்த பகுதியில் உள்ள ஆஷா பணியாளர்களை முடுக்கிவிட்டு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எந்த குறையும் வராமல் பார்த்துக்கொள்ள கூறியுள்ளோம். எனவே ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் அதனை கவனத்திற்கு கொண்டு வந்தால் நிச்சயம் அதனை சரி செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பி.எஸ்.பி.சந்திரா, வழக்கறிஞர்கள் மகேஷ், சதாசிவம், குணசிங் ஆசான், ரஹீம், நசீர், கோபால்தாஸ், ஜீவா, சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: