விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியா பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட், ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் (34), விமானத்தில் சார்ஜா செல்ல வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தனர். அப்போது பயணி சதீஷ்குமார் மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும், சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவாகி இருப்பதும், தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

மேலும், சேலம் மாநகர காவல் ஆணையர், சதீஷ்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளார். அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. எனவே போலீஸ் கைதுக்கு பயந்து சதீஷ்குமார் வெளிநாடு தப்ப முயற்சிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், சேலம் பயணி சதீஷ்குமாரின் சார்ஜா பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை பிடித்து குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர். இதுபற்றி சேலம் மாநகர காவல் ஆணையருக்கு அவசர தகவல் தெரியப்படுத்தினர். சேலம் மாநகர தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையம் வந்து சதீஷ்குமாரை அழைத்துச் செல்கின்றனர்.

Related Stories: