புன்னம் பசுபதிபாளையம் கோயிலில் ஜன.2ல் அனுமன் ஜெயந்தி விழா

க.பரமத்தி, டிச. 25: க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் தார்சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பூஜையும் சிறப்பு நாட்களில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நாட்களான அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இக்கோவிலில் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசி மேஷ லக்கனம் அமாவாசை திதியில் அனுமன் அவதரித்த தினத்தை அனுமன் ஜெயந்தி விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வழிபாட்டில் பங்கேற்போருக்கு அனுமன் புத்தி, பலம், கீர்த்தி, மனோ பலம் ஆகியவற்றை அருள்வார். பஞ்ச பூதத்தை வென்ற அனுமன் சகல தோஷங்களையும் போக்குவார் என்பது ஐதீகம். இதன்படி வரும் 2ம் தேதி அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் மாலை, 6 மணிக்கு கோபூஜை, பாலாபிஷேகம், இளநீர், பன்னீர், அபிஷேகம் செய்யப்பட்டு அனுமந்தராயசாமிக்கு, வெண்ணை சாத்து, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு அனுமந்தராயசாமி (ஆஞ்சநேயர்) சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு பிறகு வழிபாடு நடைபெறுகிறது. இதில் சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்யுமாறு கோவில் அர்ச்சகர் சுதர்சனம் மற்றும் விழா குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: