பள்ளிகளில் கட்டிட உறுதித் தன்மை குறித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு

திருப்பூர், டிச. 22:  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நெல்லையில், அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டம் வாரியாக பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், ஒன்றிய அளவில் குழுக்கள் அமைத்து, பழுதடைந்த மற்றும் இடிக்க வேண்டிய பள்ளிக் கட்டிடங்களைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

உதவி செயற்பொறியாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட பொறியாளர், பள்ளித்தலைமையாசிரியரை உள்ளடக்கிய குழுவினர், பள்ளிகள் தோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இவர்கள், ஒவ்வொரு பள்ளிகளைப் பார்வையிட்டு, கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வறிக்கை, பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதற்கேற்ப, ஓரிரு நாட்களில், அத்துறை அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு செய்து, இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் (தொழில் கல்வி) ஜெயச்சந்திரன் திருப்பூர் நெசவாளர் காலனி துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பெருமாநல்லூர் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் உதவிப் பெறும் பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தார்.

Related Stories: