ஜி.ஹெச்சில் தொழிலாளிக்கு பித்தப்பையில் கல் அகற்றம்

கிருஷ்ணகிரி, டிச.5: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசோகன் கூறியதாவது: காவேரிப்பட்டணத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன்(49) என்பவர், கடந்த நவம்பர் 15ம் தேதி வயிற்று வலி காரணமாக உள்நோயாளியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு பித்தப்பை மற்றும் பித்த நாளத்தில் கல் அடைப்பு ஏற்பட்டு, வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை இருந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

டாக்டர்கள் ஸ்ரீதரன், பத்மநாபன், சுந்தராம்பாள், அருண்விஜய், சந்தோஷ் ஆகியோர் தலைமையில் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் போது, பித்த நாளத்தில் நுண்துளைக் கருவி வழியாக கற்கள் அகற்றப்பட்டும், பித்தப்பை அகற்றியும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பித்தநாளத்தை குடலுடன் இணைத்து நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் செய்வதற்கு ₹1 லட்சம் வரை செலவாகும்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அதிநவீன லேப்ராஸ்கோபி, பித்தப்பை அகற்றம், குடல் புண் ஓட்டைகள் சரி செய்யும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள், இந்த மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: