திருவாடானையில் தண்ணீரில் தத்தளிக்கும் தீயணைப்பு நிலையம் அவசர அழைப்பிற்கு விரைந்து வர முடியாமல் திணறல்

தொண்டி, டிச. 5:  திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம்  தற்போது சின்ன கீரமங்கலத்தில் இருந்து சேந்தனி செல்லும் சாலையில் ரூ.70.86  லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் கடந்த சில மாதங்களுக்கு  முன்பு மாறுதலாகி, இயங்கி வருகிறது. இங்கு செல்ல சேந்தனி சாலையில் இருந்து  சுமார் /2 கிமீ தூரம் சாலை வசதி செய்து தரவில்லை. அதனால் கடந்த சில  நாட்களாக பெய்த மழையின் காரணமாக தீயணைப்பு நிலையத்தை வெள்ளநீர்  சூழ்ந்துள்ளது. இதனால் அவசர அழைப்புகள் வரும் நேரத்தில் மழைநீரை கடந்து  தீயணைப்பு வாகனத்தை சாலைக்கு கொண்டு வருவதற்கு அதிக நேரமாகிறது. இதன்  காரணமாக அவசர அழைப்பு வருவதற்கு முன்பே தீயணைப்பு வாகனத்தை சாலையில் கொண்டு  வந்து நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து சமூகஆர்வலர்  திருவாடானை ஆனந்த் கூறியதாவது, ‘பேரிடர் காலங்களில் விரைந்து செல்ல வேண்டிய  தீயணைப்பு வீரர்கள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தங்கள் அலுவலத்தை விட்டு  வெளியே வரவே நீண்ட நேரமாகிறது. புதிய கட்டிடம் கட்டும் போதே ரோடும்  போட்டிருந்தால் இப்பிரச்னையே ஏற்பட்டிருக்காது. எனவே சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் தீயணைப்பு நிலையத்திற்கு உடனே ரோடு வசதி செய்திட நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: