திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 10 திருமணங்கள் நடந்ததால் நெரிசல்: கொரோனா விதி மீறும் மக்கள்; நோய் தொற்று பரவும் அபாயம்

சென்னை: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று ஒரே நாளில் 10 திருமணங்கள் நடந்ததால் கடும் நெரிசலுடன் காணப்பட்டது. திருமணத்தில் பங்கேற்றவர்களும், கோயிலுக்கு வந்த பக்தர்களும் கொரோனா விதிகளை கடைபிடிக்காததால், நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா தளங்களை மூடவும், கோயில்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், திருமணம் நடத்த ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள், இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகின்றனர்.

கோயில் வளாகத்தில் நடைபெறும் திருமணத்தில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் அனுமதிப்பதில் சிக்கல் உள்ளது. காரணம், கோயிலுக்கு சாமி கும்பிட வந்ததாக கூறி கூட்டம் கூட்டமாக சென்றனர். மேலும், கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெறாதவர்களுக்கு கோயிலின் உள்ளே திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயில் வளாகத்திற்கு வெளியே அனுமதியின்றி திருமணம் நடத்தி கொள்கின்றனர். இதை அறநிலைத்துறை அதிகாரிகளால் தடுக்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், முகூர்த்த நாளான நேற்று திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதில், 500க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியின்றி கூட்டமாக பங்கேற்றனர். இதனால், கோயில் வளாகம் நெரிசலாக காணப்பட்டது. தகவலறிந்து திருப்போரூர் போலீசார் அங்கு சென்று, அவர்களை கலைந்து போக செய்தனர். வெளியூர்களில் இருந்து திருமணம் என்ற பெயரில் திருப்போரூர் பகுதியில் கூட்டம் சேர்வதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: