குப்பையில் கிடந்த 10 சவரன் போலீசாரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு பாராட்டு

தண்டையார்பேட்டை: ராயபுரம் ஆடுதொட்டி ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்த மோனசுந்தரம் (55), ராயபுரம் மண்டத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை கொருக்குப்பேட்டை பகுதிகளில் குப்பையை சேகரித்து, கண்ணன் தெரு சந்திப்பில் வைத்து தரம் பிரித்து கொண்டிருந்தார். அப்போது, குப்பையில் பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது. அதை எடுத்துச் சென்று கொருக்குப்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தவமணியிடம் ஒப்படைத்தார். அவர் அந்த பையை பிரித்து பார்த்தபோது, 10 சவரன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இந்த பை கிடந்த பகுதியில் போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த முனியம்மாள் அவரது மகள் தேவி ஆகியோர் காவல் நிலையம் வந்து, நகை வைத்திருந்த பையை காணவில்லை, என புகார் அளித்தனர். வடபழனி கோயிலில் தேவிக்கு நேற்று திருமணம் நடக்க இருந்ததும், கோயிலுக்கு கிளம்பும் அவசரத்தில் பிளாஸ்டிக் பையில் இருந்த நகையை தவற விட்டு சென்றதாகவும் கூறினர். விவரங்களை சரிபார்த்து, நகை பையை முனியம்மாளிடம் ஒப்படைத்து, திருமணத்திற்காக அவர்களை உடனே அனுப்பி வைத்தனர். நகையை பெற்றுகொண்ட இருவரும் தூய்மை பணியாளருக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்தனர். நகை பையை ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

More