மானாமதுரையில் சித்திரை திருவிழாக்கள் ரத்து

மானாமதுரை, ஏப்.9: மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோயில், வீர அழகர்கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளதால் பக்தர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மானாமதுரை வைகை ஆற்றின் மேல்கரையில் ஆனந்தவல்லியம்மன் கோயிலும், கீழ்கரையில் சவுந்திராஜ பெருமாள் கோயிலும் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இரு கோயில்களிலும் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதால் வரும் 10ம் தேதி முதல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்கள் கூறுகையில், மானாமதுரையின் காவல் தெய்வமான எல்லைப்பிடாரி அம்மனுக்கு சித்திரை திருவிழா காப்புகட்டுதல் நேற்று முன்தினம் நடந்துள்ளது. ஆனந்த வல்லியம்மனுக்கும், வீர அழகர்கோயிலுக்கும் சித்திரை திருவிழா நடக்கும். ஆனால் அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால் சித்திரை திருவிழா இந்தாண்டும் ரத்து செய்யப்பட உள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றார்.

Related Stories: