ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் ஏமாற்றியவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் பேட்டி

நாகர்கோவில், ஏப்.4: ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் ஏமாற்றியவர் பொன்.ராதாகிருஷ்ணன் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தெரிவித்தார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் பிரதமரும், கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வரும்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.  முதல்வர் பிரசாரத்தின் போது குமரியில் ஆறு எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இங்கு எந்தத் திட்டம் வரவில்லை என்று கூறுகிறார். முதல்வர் என்பவர் அவருக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் முதல்வர் தான். இதனை கூட அவர் உணராத நிலை உள்ளது. பிரதமர் மோடி மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடற்கரைகளில் பல திட்டங்கள் கொண்டு வருவேன் என்று சரக்கு பெட்டக துறைமுக திட்டத்தை கோவளம் -மணக்குடி பகுதியில் அமைக்கும் நோக்கில் அவரும் பேசியுள்ளார். அவரும் மக்களின் எதிர்ப்பை மீறி துறைமுகத் திட்டம் குறித்து பேசி வருவது வருந்தத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலின்போது மத்திய அரசில் மீன் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.  ஆனால் இதுவரை அவர் செயல்படுத்தவில்லை. மீனவர்களைப் பற்றி பிரதமர் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

அதேபோன்று பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் பிரசாரத்தின் போது தான் வெற்றிபெற்றால்  மத்திய அரசின் திட்டங்களை தங்குதடையின்றி கொண்டு வருவதாக கூறியுள்ளார்.  ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கடந்த தேர்தலில் கூறியவர், இன்று வரை அவர்கள் ஆட்சி தொடரும்போது அதனை அவர் நிறைவேற்றவில்லை. நாகர்கோவிலில் பாஜக சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.காந்தி பிரசாரத்தின்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி, நகரப் பகுதியில்  இல்லந்தோறும் குடிநீர் வழங்கப்படும் , சட்டக்கல்லூரி கொண்டுவரப்படும், தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும் என்று மக்களை ஏமாற்றும் விதத்தில் பேசி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் அவர்களது ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஏன் இதுவரை செயல்படுத்தவில்லை. பாஜக  இந்து மக்களை ஏமாற்றும் இயக்கமாக மாறியுள்ளது. இனிமேலும் இந்து மக்கள் அவர்களின் பேச்சைக்கேட்டு ஏமாற தயாரில்லை.

நாகர்கோவில் தொகுதி மக்களுக்கு இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என்று மத பாகுபாடுகளின்றி அனைத்து மதத்தினரும் கோரிக்கைகளையும் மதித்து அவைகளை நிறைவேற்ற நாகர்கோவில் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி தருவேன் என்று நான் உறுதி அளிக்கிறேன். ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்று கூறி விட்டு அதில் இந்த சான்றிதழ் தணிக்கை துறையின் ஆய்வு மற்றும் மாறுதலுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளனர். இது ஏமாற்று வேலையாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜ கட்சியினர் கோயில்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களைத் விட நான் அதிக திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். தோல்வி பயம் காரணமாக பா.ஜ இப்போது ஊர் தலைவர்களுக்கு பணம் வழங்கி வருகிறது. இதனையெல்லாம் மீறி குமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும், மக்களவை தொகுதியிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: