30 சவரன் நகைக்காக பைனான்ஸ் அதிபர் மனைவியை கொன்று தப்பிய தம்பதி கைது:

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் 5வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரவி (52). சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி  கலைவாணி (47). இவர்களது மகன் உமேஷ், புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக இருந்த கலைவாணி செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து, மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில்  கலைவாணியின் வீட்டு காவலாளியாக வேலை செய்து வந்த  ராகேஷ் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கர்நாடக மாநிலத்துக்கு தப்பிய ராகேஷ் (31), அவரது மனைவி ரேவதி (25) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கலைவாணி  வீட்டில் ராகேஷ் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

கலைவாணி வீட்டில்  அதிக பணம், நகை இருப்பதை தெரிந்து கொண்ட காவலாளி ராகேஷ், அதை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று ரேவதி வீட்டினுள் வேலை செய்ய  உள்ளே சென்றபோது அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த கலைவாணி சில வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அப்போது, பின் பக்கமாக வந்த ராகேஷ் அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். பின்னர், தம்பதியினர் அவரை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ₹10 ஆயிரம், தங்க செயின், மோதிரம், கம்மல், வளையல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு ஆட்டோவில் ஏறி  கோயம்பேடு சென்று அங்கிருந்து பெங்களூரு தப்பி சென்றது தெரியவந்தது. மாதவரம் போலீசார்  இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 30 சவரன் நகையும், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: