×

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்; இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே எல்லைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருந்தார். இதையடுத்து மேற்கண்ட உத்தரவுக்கு எதிராகவும்,, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற நடைமுறை இல்லாததால் புதிய வழக்கத்தை செயல்படுத்த முடியாது எனக் கூறி கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அதேபோல், தமிழ்நாடு அரசும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,” இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையில், தடை உட்பட எந்தவித இடைக்கால உத்தரவையும் எங்களால் பிறப்பிக்க முடியாது. வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். இதில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்னதாக பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவும் இடைக்கால உத்தரவு வழங்க முடியாது.

குறிப்பாக இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் தமிழக அரசு முறையீடு செய்து கொள்ளலாம். அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. எனவே வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் உள்ளிட்ட அனைவரும் நான்கு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து அடுத்த நான்கு வாரத்திற்குள் மேல்முறையீட்டு மனுதாரர் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எட்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

Tags : Thiruparankundram ,Tamil Nadu government ,Supreme Court ,New Delhi ,Munnani ,Karthigai Deepam ,Sikandar Dargah ,Justice ,G.R. Swaminathan ,CISF ,
× RELATED எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தால்...