×

கர்நாடகத்தில் 2ம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் புதிய அமைச்சர்கள் 19 பேர் பதவியேற்பு: பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் ராஜினாமா

 

பெங்களூரு: கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த ஜூன் 3ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் சித்தராமையா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 11 பேர் அமைச்சர்களாகினர். இந்நிலையில் டி.கே.சிவகுமார் தலைமையிலான அரசின் இரண்டாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. இதில் 19 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

பெங்களூரு மக்கள் பவனில் முதல்வர் டி.கே.சிவகுமார், துணைமுதல்வர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசியகீதம் இசைக்கப்பட்டது. மூன்றாவதாக மாநில மொழி பாடல் பாடப்பட்டது. அதை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

டாக்டர் அஜய்சிங், எச்.சி.பாலகிருஷ்ணா, கே.எஸ்.பசவந்தப்பா, பசவராஜராயரெட்டி, என்.செலுவராயசாமி, லட்சுமண்சவதி, மதுபங்காரப்பா, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், பி.நாகேந்திரா, பி.எம்.நரேந்திரசாமி, சி.புட்டரங்கஷெட்டி, டி.ரகுமூர்த்தி, ரிஷ்வான் அர்ஷத், ருத்ரப்பா லமாணி, சந்தோஷ்லாட், எம்.கே.சிவலிங்ககவுடா, சிவராஜ்தங்கடி, விஜயனாந்த காசப்பனர், ஜமீர் அகமதுகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இந்த விழாவை முன்னாள் முதல்வர் சித்தராமையா புறக்கணித்தார். இதற்கிடையே அமைச்சர் பதவியை எதிர்ப்பார்த்திருந்த எம்எல்ஏக்கள் கடைசி நேரத்தில் பதவி கிடைக்காததால், பல்வேறு இடங்களில் அவர்களது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யஉள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Karnataka ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,D.K. Shivakumar ,D.K. Shivakumar… ,
× RELATED எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தால்...