மதுரை: பழநி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கில், இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? எப்ஐஆர் போடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி உள்ள ஐகோர்ட் கிளை, நிலை அறிக்கையை தாக்க செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு, தனிநபர்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஐகோர்ட் கிளையில் தொடரப்பட்ட வழக்கால், பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், பழநி கோயில் அறங்காவலர் அன்னபூரணி ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வீரா கதிரவன், ரவீந்திரன் ஆகியோர், ‘‘சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி தரப்பு விசாரணை போதுமானதாக இல்லை. இந்த மோசடி பதிவு நடந்த அதே நாளில் அரசு புறம்போக்கு நிலம் ஒன்று மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்’’ என்றனர்.
அப்போது நீதிபதிகள், ‘‘அதையும் சேர்த்து கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள். அதுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’’ என்றனர். அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கிற்கு அரசியல் சாயம் பூச பார்க்கிறார்கள். நேர்மையாக விசாரணை நடந்து, கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளதா? அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கையை சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 5க்கு தள்ளி வைத்தனர்.இதனிடையே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 4வது நாளாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
