மதுரை: டாஸ்மாக்கை தனியார்மயமாக்க எண்ணுவதுபோல காவல்துறையையும் தனியார்மயமாக்குவீர்களா என விஜய்க்கு மாஜி அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார், நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: விஜய் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத் நடந்த சமயத்தில், ‘சாரி வேண்டாம். நீதி தான் வேண்டும்’ என பேசிய மாவீரன் நெப்போலியன் விஜய் இப்போது எங்கே இருக்கிறார்? தலைமறைவாகி விட்டாரா? மாற்றம் வேண்டும் என்று கேட்ட மக்களுக்கு அதிரடி பரிசாக, டாஸ்மாக் மதுபான கடைகளை தனியார்மயமாக்குகின்ற மாற்றம் தந்துள்ளார். இதனால் இனி தமிழ்நாடு மதுவிலே மிதக்கும். தண்ணீர் நாடாக வரலாறு படைக்கும். முயற்சி செய்து கிடைத்த தோல்வியும், முயற்சியே செய்யாமல் கிடைத்த வெற்றியும் வாழ்வில் நிரந்தரம் அல்ல.
இன்றைய லாக்கப் டெத் மரணங்களுக்கு பொறுப்பேற்று, மனுநீதிச் சோழராக விஜய் தன் பதவியை துறப்பாரா? மதுபான விற்பனை முறைகேட்டை தடுக்க முடியவில்லை என்று தனியார்மயமாக்குவது என்ன புத்திசாலித்தனம்? 717 கடைகளை பூட்டுகிறோம் என்று அரசாணை வெளியிட்டு மக்களை ஏன் ஏமாற்றினார்? இப்போது முறைகேட்டை தவிர்க்க முடியவில்லை என்று தனியார்மயம் என்று நியாயம் கற்பிக்கிறார்.
லாக்கப் டெத் மரணத்தையும் தடுக்க முடியவில்லை என்று காவல்துறையை தனியார்மயம் ஆக்கி விடுவாரா? அரசு மருத்துவமனையில் முறைகேடுகளை, போக்குவரத்து, கல்வித்துறை முறைகேடுகளை தடுக்க முடியவில்லை என்றால் தனியார்மயம் ஆக்கி விடுவாரா? தவெக அரசின் தடுமாற்றத்தை பார்க்கிறபோது, இந்த அரசு இன்னும் எத்தனை நாளைக்கு என்பதே மக்களிடத்தில் கேள்வியாக உள்ளது. அனுபவமில்லாத, ஆற்றல் இல்லாத, அரைவேக்கட்டுத்தனமான அரசு, இன்னும் இதுபோன்ற எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைப்பார்கள் என்று பார்ப்போம்.இவ்வாறு பேசியுள்ளார்.
