ஐசிசி ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் சுப்மன் கில்!

டெல்லி: ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 801 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த வாரம் வெறும் 1 புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட கில், கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களை விளாசி இந்த வாரம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் மட்டும் 188 ரன்களை குவித்துள்ள கில், நடப்பாண்டில் 142 சராசரியுடன் 426 ரன்களையும், 116.71 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார். ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 60.33 சராசரியுடன் 3,379 ரன்களைக் குவித்துள்ளதே இவரை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 794 புள்ளிகளுடன் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில் இந்திய வீரர்களான விராட் கோலி (767 புள்ளிகள்) மற்றும் ரோகித் சர்மா (758 புள்ளிகள்) முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும், இப்ராஹிம் சத்ரன் ஐந்தாவது இடத்திலும், பாபர் அசாம் ஆறாவது இடத்திலும், ஜோ ரூட் எட்டாவது இடத்திலும் உள்ளனர். மறுபுறம், டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப்-10 பட்டியலில் இரு இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ள நிலையில், கேப்டன் சுப்மன் கில் 743 ரேட்டிங் புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 733 ரேட்டிங் புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் தொடர்கின்றனர்.

Related Stories: