×

ஈரோட்டில் நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து இன்ஸ்டா காதலி எரித்துக்கொலை: கள்ளக்காதலன் வெறிச்செயல்

ஈரோடு: ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பாரதி நகர் 3வது வீதியை சேர்ந்த சென்னப்பன் மகள் வினோதினி (24). இவரது கணவர் சூர்யா (28). தம்பதியினருக்கு தனிஷ் (4) என்ற மகன் உள்ளார். சூர்யா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்ததால், அங்கேயே குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

வினோதினி அதிக நேரம் செல்போனை பார்த்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. குறிப்பாக, சூர்யா வேலைக்கு சென்றதும் வினோதினி இன்ஸ்டாகிராம் மூலம் பல பேருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வினோதினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடி அரண்மனை தெருவை சேர்ந்த நவநீதிகிருஷ்ணன்(26), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நவநீதகிருஷ்ணன் சிம்கார்டு விற்பனை செய்து வந்தார்.

இவர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையில், வினோதினிக்கும், சூர்யாவுக்கும் மீண்டும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், வினோதினி கணவரை விட்டு பிரிந்து மகனுடன் ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டின் அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதன்பின் வினோதினி, ஈரோட்டில் உள்ள ஆர்கானிக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து, இன்ஸ்டாவில் வினோதினியும் நவநீதகிருஷ்ணனும் பேசி பழகி வந்தனர்.

இந்நிலையில், நவநீதகிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த சில நாட்களாக வினோதினி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால், வினோதினிக்கு வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகபட்டு அவரிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் நவநீதகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்தார். தொடர்ந்து நள்ளிரவு வினோதினி வீட்டுற்கு சென்றார். அப்போது, வீட்டில் மகனுடன் வினோதினி தூங்கிக்கொண்டிருந்தார்.

பின்னர், நவநீதகிருஷ்ணன் வினோதினியை கதவை திறக்கும் படி கூறினார். தூக்க கலக்கத்தில் இருந்த வினோதினி கதவை திறந்ததும் அத்துமீறி நுழைந்த நவநீதகிருஷ்ணன், ‘‘வினோதினியிடம் ஏன் என்னிடம் பேசவில்லை’’ என தகராறில் ஈடுபட்டார். அதற்கு வினோதினி, ‘‘உன்னிடம் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. நீ வீட்டை விட்டு வெளியே போ’’ என சத்தம் போட்டார். இதனால், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன் வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வினோதினி மீது ஊற்றி தீ வைத்தார்.

வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் சித்ரா, தந்தை சென்னப்பன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு தீயில் எரிந்த வினோதினியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

* மரண வாக்குமூலம்
முன்னதாக, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வினோதியிடம், ஈரோடு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி நேரில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில் வினோதினி, நவநீதகிருஷ்ணன் தான் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார் என மரண வாக்குமூலம் அளித்தார்.

* கரூரில் சிக்கிய கள்ளக்காதலன்
நவநீதகிருஷ்ணனின் செல்போன் சிக்னலை வைத்து ஈரோடு தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், நவநீதகிருஷ்ணனின் செல்போன் டவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை காட்டியது. இதையடுத்து, போலீசார் கரூர் சென்று குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தீக்காயங்களுடன் நவநீதகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் உடனடியாக கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்படுவார். தொடர்ந்து, மருத்துவமனையில் நவநீதகிருஷ்ணனை போலீசார் கண்காணித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கள்ளக்காதலன் தப்பிக்காமல் இருக்க எரியும் உடலுடன் கட்டிப்பிடித்த காதலி
நவநீதிகிருஷ்ணன் வினோதினி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததால் உடலில் தீ மளமளவென பரவியது. வலியால் துடிதுடித்து அவர் சத்தம் போட்டு அலறினார். அப்போது நவநீதகிருஷ்ணன் தப்பி செல்லாதவாறு தீயுடன் அவரை கட்டி பிடித்தார். இதில், நவநீதகிருஷ்ணன் உடலிலும் தீ பரவியது. இதை சற்றும் எதிர்பார்க்காத நவநீதகிருஷ்ணன் வினோதினியின் பிடியிலிருது தப்பி தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி சென்றார்.

Tags : Erode ,Sennapan ,Vinodini ,3rd Street, ,Erode Bharati Nagar ,Surya ,
× RELATED குமாரபாளையம் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை கொள்ளை