சென்னை: மாநிலம் முழுவதும் கடந்த 5 நாட்களில் நடந்த அதிரடி சோதனையில் போதை பொருள் விற்பனை செய்ததாக 255 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் வகையில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் டிஜிபி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாவட்டம் மற்றும் மாநகர காவல்துறையினர் கடந்த 20ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான 5 நாட்கள் நடந்த போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில், போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
அதில், வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்ததாக தனித்தனியாக 200 வழக்குகள் பதிவு செய்து, கஞ்சா வியாபாரிகள் உள்பட 255 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 517 கிலோ கஞ்சா, 15 ஆயிரம் கஞ்சா சாக்லேட், எம்.டி.எம். 69 கிராம், 146 கிராம் மெத்தாம்பெட்டமின், 1.45 கிராம் ஹெராயின், 17 கிராம் அபின், 7,552 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 486 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 டன் 237 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
