×

சென்னையில் ரூ.7 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 4 பேர் சிக்கினர்

ராமநாதபுரம்: சென்னையில் ரூ.7 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை ராமநாதபுரம் மாவட்ட போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 19ம் தேதி ராமநாதபுரம் நகர் போலீசார் நடத்திய சோதனையில் 22 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த மதன்ராஜா (29), வெற்றிவேல் (22), கீழக்கரையை சேர்ந்த சிரஞ்சீவி (20), சீனி சாகுல்ஹமீது (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தவலின்படி கடந்த 25ம் தேதி கேணிக்கரை போலீசார் பாரதி நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு 11 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரத்தை சேர்ந்த சக்திவேல், கலாநிதி ஆகியோரை கைது செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் பங்களா குடிநீர் தொட்டி பகுதியில் நகர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 9 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜேபிஸ் (25), ராமநாதபுரம் காரிக்கூட்டம் முகம்மது அஸ்லாம் (22), முகம்மது உமருல்ஜமீம் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்படி சென்னைக்கு சென்ற போலீசார் முக்கிய குற்றவாளிகள் 4 பேரை பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான 1.50 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai ,Ramanathapuram ,Ramanathapuram district ,Sri Lanka ,
× RELATED குமாரபாளையம் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை கொள்ளை