பார்படோஸ்: மறைந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் சர் கேரி சோபர்சின் இறுதிச் சடங்கில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் பார்படோசை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டெஸ்ட் வரலாற்றில் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக முத்திரை பதித்த சோபர்ஸ் (89), கடந்த 17ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கு பார்படோஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக டிரினிடாட், பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் 90 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, அந்த வெற்றியை மறைந்த கேரி சோபர்சுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 311 மற்றும் 181; பாகிஸ்தான் 282 மற்றும் 120. அந்த டெஸ்டில் 40 விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
போட்டி முடிந்ததும் பார்படோசை சேர்ந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ், ஜோமெல் வாரிகன், ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், கெமார் ரோச், ஜோஷுவா பிஷப் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் துணை பயிற்சியாளர் பிளாய்ட் ரீபர், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் கிஷோர் ஷேலோ ஆகியோர் சோபர்சின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றனர். பார்படோஸ் பிரதமர் மியா மோட்லியும் இறுதிச் சடங்கில் பங்கேற்று சோபர்சுக்கு அஞ்சலி செலுத்தினார்.
