தனது மகளை கவனிப்பதற்காக மேலும் 3 நாட்கள்; விடுமுறை எடுத்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிநீக்கம்: ஐதராபாத் ஆபீஸ் முன் போராட்டம்

 

ஐதராபாத்: உடல்நிலை குறைவால் விடுமுறை எடுத்த சாப்ட்வேர் இன்ஜினியரை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது ஐதராபாத்தில் பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த பாவனா என்ற பெண், தனது உடல்நிலை பாதிப்பு மற்றும் தனது மகளின் உடல்நலக் குறைவு காரணமாக விடுமுறை எடுத்ததால் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது மருத்துவ சிகிச்சைக்காக சுமார் 2 வாரங்கள் விடுமுறையில் இருந்தபோது, பணிக்குத் திரும்புமாறு நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.

இதுமட்டுமின்றி, அவர் விடுமுறையில் இருந்த காலத்திலும், உடனடியாக பணிக்குத் திரும்பக் கோரியும், அவரது வருகை குறித்து எச்சரித்தும் அடிக்கடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாத தனது மகளைக் கவனிப்பதற்காக மேலும் 3 நாட்கள் விடுமுறை கேட்டபோது, நிர்வாகத்தினர் அவரது விடுப்பு குறித்து கேள்வி எழுப்பியதுடன், எவ்வித தகுந்த காரணமும் இன்றி அவரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். கழிவறைக்குச் செல்வதற்குக் கூட அனுமதி பெற வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டிருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிறுவனத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மேட்சல் பகுதியில் உள்ள அந்த நிறுவன அலுவலகத்தின் முன்பு பாவனா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாவனா கூறுகையில், ‘பெண் ஊழியர்களுக்குக் குடும்பப் பொறுப்புகளும் இருப்பதால், சாப்ட்வேர் நிறுவனங்கள் அவர்களை கூடுதல் புரிதலோடு நடத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த புகார்கள் குறித்து அந்த நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காத நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: