மக்களவையில் ஒன்றிய அரசு அறிவிப்பு நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு தயார்: வீதியில் போராடுவதால் ஒரு பலனும் கிடைக்காது

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதம் நடத்த தயார் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதே சமயம், வீதிப் போராட்டங்களால் எந்த பலனும் கிடைக்காது என்றும் எதிர்க்கட்சிகளிடம் கூறி உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்கவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், நேற்றும் அமளியில் மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்றத்தில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், எப்போது விவாதம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மக்களவை மீண்டும் கூடியதும், காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், ‘‘எங்கள் கோரிக்கை எளிமையானது. ஒட்டுமொத்த நாடும் நமது மாணவர்களின் வேதனையை பகிர்ந்து கொள்ளும் வேளையில், அவையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும். அதே போல, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. எந்த விதியின் கீழ் விவாதத்தை நடத்துவது, அதற்கான தேதி, கால அளவு ஆகியவை குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி தலைவர்களையும் அவைத் தலைவர் சந்திக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் விரிவான விவாதத்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இளைஞர்கள் தொடர்பான இந்த உணர்வுப்பூர்வமான விவகாரங்கள் நாடாளுமன்றத்தில்தான் விவாதிக்கப்பட வேண்டும். அதை விட்டு, வீதிப் போராட்டங்கள் நடத்துவது எந்த பலனையும் தராது’’ என்றார்.

* எதிர்க்கட்சிகள் போராட்டம்
நாடாளுமன்றம் நேற்று கூடுவதற்கு முன்பாக காலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கருப்பு உடை அணிந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கோஷமிட்டனர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரி கட்சிகள், ஆர்ஜேடி, திரிணாமுல் காங்கிரஸ், ஜேஎம்எம் மற்றும் பிற கட்சிகளின் எம்பிக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கேவின் அறையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

Related Stories: