×

குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈக்கள் தொல்லையால் திக்குமுக்காடும் பொதுமக்கள்

குன்னூர் : குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈக்கள் தொல்லையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

​குன்னூர் அருகே உள்ள அளக்கரை, வண்டிச்சோலை, அட்டடி போன்ற குடியிருப்பு மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் ஈக்களின் பெருக்கம் திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடியிருப்புகள், கடைகளுக்குள்ளும் கூட்டமாகப் புகுந்து சுற்றி வரும் இந்த ஈக்கள், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருகின்றன.

குறிப்பாக, சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது தலைக்கு மேல் இந்த ஈக்கள் கூட்டமாக வட்டமிடுவதுடன், எதிர்பாராத விதமாக கண், வாய் மற்றும் மூக்கிற்குள் புகுந்து விடுகின்றன. மேலும், கடைகள் மற்றும் வீடுகளில் திறந்து வைக்கப்படும் உணவுப் பொருட்களிலும் இந்த ஈக்கள் விழுந்து இறப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

பகல் நேரத்தை விட, இரவு நேரங்களில் இந்த ஈக்களின் நடமாட்டம் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் எரியும் மின் விளக்குகளை நோக்கி இந்த ஈக்கள் லட்சக்கணக்கில் படையெடுக்கின்றன.

முன்னதாக, இந்த ஈக்களின் தொல்லை கடந்த சில வாரங்களாக அரவேனு மற்றும் கொட்டகம்பை ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால், தற்போது குன்னூர் நகராட்சி மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சிப் பகுதிகளிலும் இது வெகுவாக பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.​

தற்காலிக தீர்வாக பெரும்பாலான கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள், பல்புகள் மற்றும் சுவர்களில் எண்ணெய்யைத் தடவி வைத்து இந்த ஈக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், ஈக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், இந்த எளிய வழிமுறைகளால் அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஈக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறையினர், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் இணைந்து போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருமிநாசினி தெளித்தல் மற்றும் கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு பொதுமக்களின் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gunnar ,Kalkarai ,Vandichola ,Atadi ,Kunnur ,
× RELATED சீர்காழியில் முதியவரை ஈவு...