×

வயல்வெளியில் சடலங்களை கொண்டு செல்லும் அவலம்

*அதிகாரிகள் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே சுடுகாட்டுக்கு உரிய பாதை வசதி இல்லாததால் வயல் வெளியில் சடலங்களை தூக்கிச் செல்லும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

பொதுமக்களில் யாராவது வயோதிகம் காரணமாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தால் சடலத்தை அருகில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வார்கள். ஆனால் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு மற்றும் பட்டா இடங்களில் செல்வதால் ஒற்றையடிப் பாதையில் சடலங்களை சிரமப்பட்டு எடுத்து சென்று வருகின்றனர்.

இதேபோல் நேற்று முன்தினம் விபத்தில் இறந்த இளைஞரின் ஒருவரது சடலம் நேற்று வளர்ந்த நெற்பயிர்கள் இடையே சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:எங்கள் கிராமம் தெய்வீகம் நிறைந்த கிராமம் ஆகும். பொதுமக்களில் யாராவது நோய்யுற்றோ அல்லது வயோதிகம் காரணமாக இறந்துவிட்டால் நாங்கள் மலைக்கு அருகில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்வோம்.

வீட்டிலிருந்து மலைப்பாதை வழியே சடலத்தை எடுத்துச்சென்று சுடுகாட்டு பாதைக்கு திரும்பும் வழியானது ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதால் ஒற்றையடி பாதையிலே நாங்கள் இறந்தவர்களின் சடலங்களை சிரமப்பட்டு எடுத்து செல்கிறோம். குறிப்பாக அப்பகுதியில் பயிர்கள் வளர்ந்து விட்டால் வயலில் உள்ள சேறு, சகதியில் இறங்கி மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து செல்லும் நிலையில் உள்ளோம்.

இது குறித்து நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்துள்ளோம். மேலும் இந்த சம்பவம் குறித்து ஊரக வளர்ச்சி துறை மற்றும் வருவாய் துறையினரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட சுடுகாட்டு பாதை குறித்து வந்த புகார் மனுவின்பேரில் கடந்த வாரம் சேத்துப்பட்டு துணை தாசில்தார் நேரடியாக இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளார்.

மேலும் அப்பகுதியில் உள்ள பட்டா மற்றும் ஆக்கிரமிப்பு இடங்களில் வளர்ந்துள்ள பயிர் அறுவடை முடிந்த பிறகு அப்பகுதியில் அளவீடு செய்யப்பட்டு சுடுகாட்டு பகுதிக்கு சடலங்களை எவ்வித சிரமமின்றி எடுத்து செல்ல பாதை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர்.

எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Peranamallur ,Avaniapuram ,Tiruvannamalai district ,
× RELATED வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது – கனிமொழி எம்.பி