பொள்ளாச்சி: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் விசாரணைக்கு வந்த தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ மற்றும் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி முகேஷ் (30). இவருக்கும் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டு, இருவரும் கோவையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாளுக்கு முன்பு அந்த பெண் கணவருடன் சென்றுள்ளார். இருப்பினும், முகேஷ் அவ்வப்போது அந்த பெண்ணிடம் சென்று பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்மையில் அந்த பெண்ணும் கணவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். அவர்கள் ஒரு சில நாட்களில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த பிரச்னைக்கு காரணமான முகேஷிடம், கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ ஜான்சன் விசாரணை நடத்தினார். அப்போது இனிமேல் பிரச்னை செய்யக்கூடாது என மிரட்டி, ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லஞ்சம் வாங்கியது வெளியில் தெரிய வரவே சிறிது நேரத்திலேயே செல்போனில் முகேசை தொடர்பு கொண்ட ஏட்டு நாகராஜன், நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க எஸ்.ஐ ஜான்சன் சொன்னார். நீங்க எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு முகேஷ் நான் வெளியில் இருக்கிறேன் காலையில் கோவை சென்று விடுவேன். இப்போது வர முடியாது என கூறியுள்ளார்.
தொடர்ந்து, லஞ்சப் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு ஏட்டு நாகராஜன் கெஞ்சவே, காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும். பணம் எனக்கு வேண்டாம் இந்த பிரச்னையில் இருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும் என முகேஷ் கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து எஸ்.ஐ ஜான்சன், ஏட்டு நாகராஜன் ஆகிய இருவரையும், சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
