நியூயார்க்: ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான பைனலில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணியுடன் ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணி இன்று மோதுகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகள் இணைந்து நடத்தி வரும் இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் 12 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றில் முடிவில் 16 அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. ரவுண்ட் ஆப் 32, ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், ரோட்ரிகோ ஹெர்னாண்டெஸ் தலைமையிலான ஸ்பெயின் அணியும் பரபரப்பான பைனலில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அர்ஜென்டினா அணி நடப்பு உலக சாம்பியன் மற்றும் தென் அமெரிக்க சாம்பியன் என்ற கோதாவோடு தொடை தட்ட, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல… முன்னாள் உலக சாம்பியன் மற்றும் நடப்பு ஐரோப்பிய சாம்பியன் என்று முஷ்டி முறுக்குகிறது ஸ்பெயின். அர்ஜென்டினா அணி பைனல் வரை முன்னேறி இருப்பதற்கு முழுமுதல் காரணம் கேப்டன் மெஸ்ஸி தான் என்றால் மிகையல்ல. இதுவரை 8 கோல், 4 அசிஸ்ட் என அசத்தியுள்ள அவர் கோல்டன் பூட் ரேசிலும் முன்னிலை வகிக்கிறார்.
நடப்பு தொடரில், அவர் களத்தில் இருந்த நேரத்தில் 63 சதவீதம் சும்மா இப்படி அப்படி நடந்து கொண்டு! இருந்திருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். அப்படி நடந்துகொண்டிருக்கும்போதே எதிரணியின் பலம், பலவீனத்தை கணித்து, சக வீரர்களுக்கு பந்தை கடத்தித் தருவதிலும், தாக்குதலுக்கான வியூகத்தை வகுத்து துல்லிய தாக்குதலை செயல்படுத்துவதிலும் தான் அடங்கியிருக்கிறது மெஸ்ஸியின் மேஜிக் ரகசியம். அவரோடு லதாரோ மார்டினஸ், என்ஸோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மெக் அலிஸ்டர், ஜூலியன் அல்வாரெஸ் ஆகியோரும் ஸ்பெயின் அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அர்ஜென்டினா அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறார்.
நாக் அவுட் சுற்று போட்டிகளில் இக்கட்டான தருணங்களை சந்தித்த நடப்பு சாம்பியன், கடைசி வரை மனம் தளராமல் உறுதியுடன் போராடி தோல்வியின் பிடியில் இருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது. அந்த போராட்ட குணம்தான் அர்ஜென்டினாவை பைனல் வரை அழைத்து வந்துள்ளது. அதே சமயம், ஒருங்கிணைந்து விளையாடுவதிலும் தற்காப்பு ஆட்டத்திலும் அர்ஜென்டினாவை விட மேம்பட்ட அணியாக விளங்குகிறது ஸ்பெயின். நடப்பு தொடரில் அந்த அணி விளையாடிய 7 போட்டியில் இதுவரை ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது என்பதில் இருந்தே அதன் பாதுகாப்பு அரண் எத்தனை வலுவானது என்பதை உணர முடியும். குறிப்பாக, கோல் கீப்பர் உனய் சைமனை தாண்டி பந்தை வலைக்குள் திணிப்பதற்கு அசாத்தியமான திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும். அந்த லக் அர்ஜென்டினாவுக்கு அடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கேப்டன் ரோட்ரி, பெட்ரோ போர்ரோ, லாமின் யமால், மைகேல் ஒயர்ஸபால், டானி ஒல்மோ ஆகியோர் அர்ஜென்டினாவுக்கு சவாலாக இருப்பார்கள்.
போட்டிக்கு முந்தய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஸ்பெயின் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கட்டியம் கூறினாலும், மெஸ்ஸியின் மாயாஜாலம் தங்களை காப்பாற்றும் என நம்புகிறது அர்ஜென்டினா தரப்பு. 39 வயதாகும் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என்பதால், தனது முத்திரையை அழுத்தமாகப் பதிக்க அவரும் உறுதியுடன் உள்ளார். கோப்பையை தக்கவைத்துக் கொள்ள அர்ஜென்டினாவும், மீண்டும் சாம்பியனாக ஸ்பெயினும் வரிந்துகட்டுவதால் இன்றைய பைனலில் அனல் பறக்கும்… தீ தகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
