×

சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு: 20 ஆண்டாக நீடித்த நடிகையின் மனப் போராட்டம்

 

மும்பை: சினிமாத்துறையில் நிலவும் நிறவெறி மற்றும் உருவக் கேலி குறித்து நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.தமிழ் மற்றும் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘எனது முதல் படத்தில் எனது உண்மையான நிறத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வெளிறிய நிறமுடையவளாக, அதாவது சாம்பல் நிறத்தில் ஒப்பனை மூலம் என்னைக் காட்டினார்கள்; முகத்தின் நிறத்துடன் உடலின் நிறத்தைப் பொருத்துவதற்காக உடல் முழுவதும் ஒப்பனை செய்ய வேண்டியிருந்தது’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அழகுக்கான வரையறையை யார் வகுத்தது என்று தெரியவில்லை, பல பெண்களுக்கு அவர்களது சொந்த குடும்பத்தினரே உருவக் கேலி செய்யும் பிரச்னை இன்றும் உள்ளது; இதிலிருந்து மீண்டு வந்து என்னை நானே முழுமையாக ஏற்றுக் கொள்ள எனக்கு 20 ஆண்டுகள் ஆனது, எனது 40 வயதுகளில்தான் இந்த மன அழுத்தத்தில் இருந்து நான் விடுபட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘எனது ஆரம்பகால வாழ்க்கையில், உயரம் குறைவான கதாநாயகர்களுடன் நடிக்கும்போது தான் கூனிக் குறுகி நடக்க வேண்டியிருந்தது.

ஆடை வடிவமைப்பாளர்கள் கூட எனது உடலில் மாற்றங்களைச் செய்ய வற்புறுத்தியதால் எப்போதும் திணிக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டியிருந்தது’ என்று அவர் கூறியுள்ளார். சுமார் 14 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த சமீரா ரெட்டி, அபிஜித் மோகன் வராங் இயக்கத்தில் கடந்த மே 15ம் தேதி வெளியான ‘ஆக்ரி சவால்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mumbai ,Samira Reddy ,Bollywood ,
× RELATED ம.பியில் 4 பி.எட் கல்லூரிகளில் முறைகேடு: ஒன்றிய கல்வி அமைச்சகம் விசாரணை