சென்னை: ‘விக்ரம்-1’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தாங்களாகவே உள்நாட்டிலேயே தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட்டின் முதல் சுற்றுப்பாதை ஏவுதலை நேற்று சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு மேற்கொள்ப்படும் என அறிவித்து இருந்தது. ‘வருகை’ என்ற பொருள்படும் ‘ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், முற்றிலும் தனியாரால் உருவாக்கப்பட்ட ஏவுகலனையை பயன்படுத்தி விண்வெளிச் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான இந்தியாவின் முதலாவது முயற்சியாகும்.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த ஏவுகலன், ஏழு அடுக்கு மாடி உயரத்தைக் கொண்டது. இது விண்வெளியின் குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு 350 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைப் பயணத்திற்காக, விண்வெளியில் 60 டிகிரி சாய்வில், சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விக்ரம்-1 தனது முதல் சோதனைப் பயணத்திலேயே, இந்திய புவி கண்காணிப்பு நானோ-செயற்கைக்கோள் தயாரிப்பாளரான ‘கிரஹா ஸ்பேஸ்’, இந்திய விண்வெளிக் கழிவு அகற்றும் நிறுவனமான ‘காஸ்மோசெர்வ்’, விண்வெளிப் பாகங்கள் தயாரிப்பாளரான ‘டி-கியூப்ட்’ மற்றும் முக்கிய விமான தரவுகளைச் சேகரிக்கும் தங்களின் சொந்த ‘ஸ்கோப்’ செயற்கைக்கோள் ஆகியவற்றின் பல்வேறு தொழில்நுட்பக் செயல்விளக்கப் பொருட்களை ஏந்திச் செல்லவுள்ளது. இது தவிர, விக்ரம்-1 ராக்கெட் ‘காஸ்மோஸ் டயமண்ட்ஸ்’ நிறுவனத்தின் ‘காஸ்மிக் ப்ளூம்’ எனப்படும் வைர கலைப் படைப்பு ஒன்றையும் மற்றும் ஒரு நுண் கலைப் படைப்பையும் ஏந்திச் செல்லவுள்ளது. ராக்கெட் ஏவப்படும் நேரத்தின் போது கட்டுப்பாட்டு வளையங்களை உருவாக்குவதற்காக தேவையான அனைத்து விண்வெளி மற்றும் கடல்சார் எச்சரிக்கைகளும் முன்னதாகவே வழங்கப்பட்டிருந்தன.
ஸ்கைரூட்டின் விக்ரம்-1 உடன் இணைந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சொந்த சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன் மற்றும் அக்னிகுல் நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள ராக்கெட்டுகள் ஆகியவை விண்வெளியின் இந்த சுற்றுப்பாதை பகுதியில் செயற்கைக்கோள்களை ஏவும் இந்தியாவின் திறனை மேலும் விரிவுபடுத்த உள்ளன. தற்போது உலக அளவில் இணையச் சேவைகளை வழங்கும் ஸ்டார்லிங்க் மற்றும் ஒன்வெப் போன்ற பெரு நிறுவனங்களின் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை விண்ணில் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொள்ளும்போது, குறைந்த செலவில் சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் இந்த புதிய ஏவுதல் திறன்கள் வணிகரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.
இதுவரை, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உள்பட இரண்டு இந்திய ஏவுகலன் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே சப்-ஆர்பிட்டல் பயணங்களை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளன. சப்-ஆர்பிட்டல் என்பது, இந்த வாகனங்கள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு கொண்டு சென்றாலும், அவற்றை ஒரு நிலையான சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான போதுமான வேகத்தைக் கொண்டிருக்காது. எனவே, தற்போதைய விக்ரம்-1 திட்டம் ஒரு நிலையான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதற்கான நாட்டின் மிக முக்கிய அடுத்தகட்ட முயற்சியாகும்.
தனியார் விண்வெளிச் சந்தையை வலுப்படுத்துவதற்காக இஸ்ரோ தனது முன்னணி தொழில்நுட்பங்களை தனியார் துறையுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறது. இதில் இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன் தொழில்நுட்பம் தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அவர்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்குத் தனியாராக ஏவுதல் சேவைகளை வழங்க முடியும். மேலும், இஸ்ரோவின் மிகவும் நம்பகமான பி.எஸ்.எல்.வி தொழில்நுட்பமும் ஒரு தொழில் கூட்டமைப்போடு பகிரப்பட்டுள்ளது, இதன் முதல் பயணம் இந்த ஆண்டிற்குள் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, விண்வெளி நிறுவனம் தனது கனரக ஏவுகலனான எல்.வி.எம் III தொழில்நுட்பத்தையும் தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவிற்காக ராக்கெட்டுகளை தயாரிப்பதுடன், சர்வதேச நிறுவனங்களுக்கும் ஏவுதல் சேவைகளை வழங்க வழிவகை ஏற்படும்.
இத்தகைய பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் ஒட்டுமொத்த விண்வெளித் துறையும் நகம் கடித்தபடி ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், திட்டமிடப்பட்ட ஏவுதல் நேரமான காலை 11:30 மணிக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு விண்வெளி மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராக்கெட்டை தானியங்கி முறையில் விண்ணில் செலுத்துவதற்கான ‘தானியங்கி ஏவுதல் வரிசைமுறை’ செயல்பாட்டில் திடீரென ஒரு தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. கணினிகளின் இறுதிச் சரிபார்ப்பின் போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத சிக்கல் காரணமாக ராக்கெட்டின் புறப்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்பான ‘திட்டமிடப்பட்ட ஹோல்ட்’ நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த விண்வெளித் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவினர் போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, அந்தத் தானியங்கி அமைப்பில் ஏற்பட்ட கோளாறைத் தீவிரமாக ஆய்வு செய்து வெற்றிகரமாகச் சரிசெய்தனர். இந்த விறுவிறுப்பான தொழில்நுட்பப் போராட்டத்தின் காரணமாக ஏவுதலில் சற்றே காலதாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டு மதியம் 12.05 மணிக்கு மீண்டும் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி மதியம் 12.05 மணிக்கு ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது. அதன் தொழில்நுட்ப தகவல்கள் சரியான பாதையில் நிலைநிறூத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த குழுவில் பணியாற்றிய விஞ்ஞனிகள்,தொழில்நுட்ப வல்லுநர்களை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டினர்.
3 நிலைகளை கொண்டது
விக்ரம்-1 ராக்கெட் 23 மீட்டர் உயரமும், 1.7 மீட்டர் விட்டமும் கொண்டது. இது மேம்பட்ட கார்பன்-கம்போசிட் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளைக் கொண்ட திட எரிபொருள் ராக்கெட் ஆகும். மேலும், செயற்கைக்கோள்களை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக, மீண்டும் இயக்கக்கூடிய திரவ எரிபொருளால் இயங்கும் ‘ஆர்பிட் அட்ஜஸ்ட்மெண்ட் மாட்யூல்’ இதில் பொருத்தப்பட்டுள்ளது.இந்த ராக்கெட் குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு (LEO) 350 கிலோ வரையிலும், சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு சுமார் 260 கிலோ வரையிலும் எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
