அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு வழக்கில் அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகளிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த நன்கொடை திருட்டு, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி நிர்வாகத்தில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் எழுந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை(எஸ்ஐடி) அமைத்து உபி அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் ராமர் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய பணத்தை எண்ணும் பணியில் சுமார் 50 பேர் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் அல்லது அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் பரிந்துரைப்படி பணியில் அமர்த்தப்பட்டவர்கள். எனவே இந்த பணியாளர்களின் பின்னணியையும், பணத்தை எண்ணும் பணியில் சேர்ந்த பிறகு அவர்கள் தங்கள் வருமானத்துக்கு மீறிய வகையில் ஏதேனும் சொத்துகளை சேர்த்துள்ளனரா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், நிர்வாகம் சார்ந்த அறக்கட்டளையின் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் அவ்வப்போது அறக்கட்டளையின் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் சில அரசு அதிகாரிகளிடமும் விசாரணை நடக்கிறது. மேலும், அறக்கட்டளையின் கட்டுமான பணிகள் மற்றும் நிலம் வாங்குதல் தொடர்பான பிற பணப்பரிவர்த்தனைகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அத்துடன் ஸ்டேட் வங்கியின் முன்னாள் ஊழியர்களான சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் ராமசங்கர் மிஸ்ரா ஆகியோரிடம் நடந்த விசாரணைகளின்போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சிலரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
39 மணி நேரம் விசாரணை நடத்த அனுமதி
கைது செய்யப்பட்டுள்ள , ராம் சங்கர் யாதவ் என்ற தின்னு யாதவ் மற்றும் மனிஷ் குமார் யாதவ் ஆகிய இருவரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திடம் காவல் துறையினர் அனுமதி கோரியிருந்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இருவரையும் 39 மணி நேர போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
