ஷிவ்புரி: மத்திய பிரதேசத்தில் கிராம மக்களின் குறைகளைக் கேட்க மறுத்த பாஜக எம்எல்ஏ காரின் முன்பகுதியில் தந்தை தன் குழந்தையை வைத்து போராட்டம் நடத்தியுள்ளார்.மத்திய பிரதேசம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் தாலுகாவின் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பவனில் கரேரா தொகுதி பாஜக எம்எல்ஏ ரமேஷ் கதிக் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின்சார விநியோகம் போன்ற பிரச்னைகள் குறித்து புகார் அளிப்பதற்காக நானக்பூர் மற்றும் பர்காதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர்.
ஆனால், அவர்கள் கொண்டு வந்த மனுவைப் பார்த்த எம்எல்ஏ ரமேஷ் கதிக், ‘நீங்கள் எனது தொகுதி வாக்காளர்கள் இல்லை; உங்கள் பகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கைலாஷ் குஷ்வாஹை அணுகுங்கள்’ என்று கூறி மனுவை வாங்கவும், அவர்களின் குறைகளைக் கேட்கவும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ‘நாங்கள் அரசாங்கத்திடம் எங்கள் பிரச்னைகளைக் கொண்டு வந்துள்ளோம்; நீங்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால் எங்கள் குறைகளைக் கேளுங்கள்’ என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த கிராமவாசி ஒருவர் எம்எல்ஏ-வின் காரின் முன்பகுதியில் தனது 4 வயதுடைய குழந்தையை கிடத்தி அதிர்ச்சிகரமான முறையில் போராட்டம் நடத்தினார். அப்போது அவர், ‘எங்கள் குறைகளை நீங்கள் கேட்கவில்லை என்றால், எங்கள் குழந்தைகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு பாதுகாப்பாக நகர்த்தினர். இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எம்எல்ஏ ரமேஷ் கதிக் தரப்பிலிருந்து இதுவரை விரிவான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
