ஜோ ரூட் 99* ரன் விளாசல்: 2வது ஒருநாள் போட்டியில் பதிலடி கொடுத்தது இங்கிலாந்து

 

கார்டிப்: இந்திய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச… இந்தியா 44 ஓவரில் 233 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 66 ரன் (71 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), விராத் கோஹ்லி 65 ரன் (66 பந்து, 8 பவுண்டரி), கேப்டன் கில் 31, பும்ரா ஆட்டமிழக்காமல் 20* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அணிவகுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர், அட்கின்சன் தலா 3 விக்கெட், சகிப் 2, சாம், ஜாக்ஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 234 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 0, ஜேக்கப் பெத்தல் 4 ரன்னில் வெளியேற இந்திய அணி உற்சாகமானது. தொடர்ந்து கேப்டன் ஹாரி புரூக் 16, சாம் கரன் 26, ஜாஸ் பட்லர் 17 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து 25.4 ஓவரில் 125 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியதால், இந்திய அணி கை ஓங்கியது. ஆனால், ஜோ ரூட் வில் ஜாக்ஸ் இணைந்து 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 72 ரன் சேர்க்க, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. வில் ஜாக்ஸ் 30 ரன் எடுத்து பிரார் வேகத்தில் கோஹ்லியிடம் பிடிபட்டார். அடுத்து வந்த கஸ் அட்கின்சன் அதிரடி காட்ட, இங்கிலாந்து 44.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

ஜோ ரூட் 99 ரன் (133 பந்து, 9 பவுண்டரி), அட்கின்சன் 23 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர், இந்திய பந்துவீச்சில் பிரார் 2, பும்ரா, பிரசித், துபே, அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது.

Related Stories: