கேரளத்தில் உணவு நஞ்சாக மாறி 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு உறுதி ஆனது.!!

கொச்சி: ‘குழிமந்தி’ உணவுக்குப் பெயர் பெற்ற ‘அல் ரீம்’ உணவகச் சங்கிலித் தொடரின் ஒரு பகுதியான கத்ரிகடவு கிளையில் உணவு நச்சுத்தன்மை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு உணவு உட்கொண்ட மூவருக்கு ‘ஷிகெல்லா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அந்த உணவகத்தில் உணவு உட்கொண்ட சுமார் 50 பேருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், மூவருக்கு ஷிகெல்லா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குழிமந்தியுடன் சேர்த்து உட்கொள்ளப்பட்ட மயோனைஸ் தான் இந்தத் தொற்றுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மயோனைஸ் சாப்பிடாதவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உணவக உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சில வணிகர்கள், மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரே ஷிகெல்லா தொற்றுக்குக் காரணம் என்று கூறுகின்றனர்.

ஆனால், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உணவு நச்சுத்தன்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த உணவகத்தின் முன் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்ததையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: