காமராஜர் சிலைக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மரியாதை

 

நெல்லை, ஜூலை 16: காமராஜர் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் ஆர்.எஸ்.முருகன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்புக்குழு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் கலந்து கொண்டு பேசுகையில், கர்மவீரர் காமராஜர் கல்வி, எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலனுக்காக ஆற்றிய மகத்தான பணிகளை நினைவுகூர்ந்து, அவரது கொள்கைகளையும், சேவை மனப்பான்மையையும் இன்றைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தவெக வடக்கு மாவட்ட இணைசெயலாளர் பைசல், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், துணை செயலாளர்கள் கார்த்திக் தங்கமுருகன், மகரஜோதி, செயற்குழு உறுப்பினர்கள் இந்துமதி, உச்சிமகாளி, கவுசல்யா, அனீஷ் பாத்திமா, சாம் கிப்ட்சன், முத்துராஜ், அலெக்ஸ், மாடசாமி, சங்கரவடிவேல் ராம், சிவ்வேல் முருகன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் காவல்கிணறு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் தனது தொகுதிக்குட்பட்ட கள்ளி குளம், வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம், மாடநாடார் குடிஇருப்பு, ஆவரைகுளம், செட்டிகுளம், கூடங்குளம், முதுமொத்தன்மொழி, திசையன்விளை, மகாதேவன்குளம், கண்ணநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவரது சிலை மற்றும் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பணகுடி திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் மற்றும் மன்றங்களின் தொடக்க விழாவில் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் எம்எல்ஏ கலந்து கொண்டு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்றத்தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிச்சீருடைகள், ஸ்கூல்பேக், ஸ்கூல் யூனிபார்ம் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மூலக்கரைப்பட்டி, காரியாண்டி, களக்காடு, ஏர்வாடி, திருக்குறுங்குடி, ராஜபுதூர், பொன்னாக்குடி பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இறுதியாக இட்டமொழி கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் கபடி பட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இணை செயலாளர் திருநாவுக்கரசு, துணைச்செயலாளர்கள் மாலதி, ஜெபஸ்டின், பொருளாளர் ஜெயின், செயற்குழு உறுப்பினர்கள் கதிரவேல் பாண்டி, பாலச்சந்திரன், ராபின், நாராயணன், வெங்கடேஷ், சுனில், முத்து செல்வி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜெபரி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஸ்டீபன், துரை, கிருஷ்ணகுமார், சின்னத்துரை, மகாராஜன், முருகேசன், ஜெயபால்,ரத்தினம், களக்காடு நகர செயலாளர் முத்துராஜ், பேரூர் கழக செயலாளர்கள் ஷேக்மைதீன், அலங்கார உடையார், மகேந்திரன், சதீஷ், மாவடி பிராங்க்ளின், மகளிர் அணி நிர்வாகி பாறைகுளம் இந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வள்ளியூரில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் வி.பிதுரை தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு காமராஜரின் பெருமைகளையும், அவர் கல்விக்கு செய்த சிறப்புகளையும், தமிழ்நாடு தற்போது கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அவர் ஆற்றிய பணிகளையும் எடுத்து கூறி மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதை எடுத்துரைத்து காமராஜர் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.பின்னர் வள்ளியூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் முன்பு மாவட்ட தலைவர் வி.பி.துரை தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ‘‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், ஏஐசிசி உறுப்பினர் வழக்கறிஞர் காமராஜ், மாவட்ட பொருளாளர் பால்ராஜ், வள்ளியூர் நகர தலைவர் பொன்பாண்டியன் உட்பட மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூர், கிராம தலைவர்கள், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையம்: கடையம் வட்டார காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 50வது ஆண்டாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜூலை 15ம்தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றங்களின் மாநிலக் கூட்டமைப்புத் தலைவர், சோனியா காந்தி பேரவைத் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் முருகன், அழகுதுரை முன்னிலை வகித்தனர். நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து தாய்மார்களுக்குப் பரிசுகள் வழங்கினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடையம் வட்டார மருத்துவ அலுவலர் சங்கரி, ஐஎன்டியுசி தேசியத் தலைவர் அமீர்கான், சாத்தா, வெள்ளத்துரை, பவுல்ராஜ், சிவ யோகானந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Related Stories: