சென்னை: பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 13ம் தேதி நடைபெற்றது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வுசெய்ய அன்றைய தினம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதை உறுதிபடுத்த 14ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்த 139 மாணவர்களுக்கு நேற்று காலை 7 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்பட்டது. அவர்களில் 91 பேர் மாற்றுத்திறனாளிகள்.
38 பேர் விளையாட்டு வீரர்கள், 8 பேர் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆவர். இந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான இணையவழி பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் 510 பேர், விளையாட்டு வீரர்கள் 3,218 பேர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 1,119 பேர் என மொத்தம் 4,927 பேர் தகுதிபெற்றுள்ளனர். இக்கலந்தாய்வுக்கான இறுதி பணி 18ம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான பொது கலந்தாய்வு இணைய வழியில் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி வரை தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது.
