சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகளில் 10 முதல் 12 குவாரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் 12 மணல் குவாரிகளை திறக்கும் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மூடப்பட்ட மணல் குவாரிகளில் 10 முதல் 12 குவாரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கட்டுமான மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அதைச் சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீண்டும் மணல் குவாரிகளை திறப்பதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் இதனால் சீர்குலையும், மணல் கொள்ளையை ஊக்குவிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் முன்பு செயல்பட்டு வந்து, அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் 48 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. பெருந்தொற்று காலத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2023ம் ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. அவற்றில் 23 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 10க்கும் மேற்பட்ட குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பின் அனைத்து குவாரிகளும் மூடப்பட்டன. திறக்கப்பட உள்ள மணல் குவாரிகள் பெரும்பாலும் காவிரி பாசன மாவட்டங்களிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அமையும் என்று தெரிகிறது.
கட்டுமான மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அதைச் சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், குஜராத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஜியோ இன்பார்மாடிக்ஸ் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பதற்காக கூறப்படும் இந்த சாக்குகளை ஏற்க முடியாது. முதலாவதாக கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க காவிரி பாசன மாவட்டங்களில் மணல் குவாரிகளை திறப்பது தான் ஒரே வாய்ப்பு அல்ல. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஏராளமான மாற்றுவழிகள் உள்ளன. இரண்டாவதாக செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவது தடுக்கப்படும் என்பது சாத்தியமல்ல.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைப்பதை தடுத்து காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற கர்நாடக அரசு துடிக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டுள்ள மணல் குவாரிகள் திறக்கப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அதை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது.
12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 5 கி.மீட்டருக்கு ஓரிடத்தில் தடுப்பணைகளை கட்டவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது வரை மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை தவெக அரசு மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது தமிழக அரசின் நடவடிக்கையால் காவிரி டெல்டா பகுதிகளின் நிலை மேலும் மோசமடையும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
அதோடு, மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதை தாண்டி, உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல், தடுக்க நினைப்போர் மீது தாக்குதல் என சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் அடிப்படைக் காரணமாகவும் அமைந்த அவலச் சம்பவங்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை பொறுப்பு என்பதை உணர்ந்து, சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
* தொடர் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், ‘‘ஆற்று மணலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து அள்ளுவதால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆற்றின் இயற்கையான ஓட்டம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். ஆற்றங்கரைகள் அரிப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் சேதமடையும்.
பாலங்கள், தடுப்பணைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் அடித்தளம் பலவீனமடையும் அபாயம் உள்ளது. வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே காவிரி படுகையில் தொடர்ந்து கண்மூடித்தனமாக, கணக்கு வழக்கு இல்லாமல் மணல் அள்ளியதன் காரணமாக காவிரி ஆற்றுக்கரைகளில் இருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரரங்களும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்களும் வறட்சியில் எங்கள் கண் முன்னரே அழிந்து நாசமாகின.
மீண்டும் மணல் அள்ளினால் எதிர்கால சந்ததியினருக்கான இயற்கை வளம் வேகமாக சுருங்கும் நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. எந்த அரசாக இருந்தாலும் மணல் அள்ளும் முயற்சியை மேற்கொண்டால் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்துவோம்’’ என எச்சரித்துள்ளார்.
