மாமல்லபுரம் நகராட்சியில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

மாமல்லபுரம், ஜூலை 14: மாமல்லபுரம் நகராட்சியில் நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடக்கிறது. மாமல்லபுரம் நகராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி, முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு தடையின்றி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது தவிர்த்து, 25க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலமும், தெருக்களில் உள்ள சின்டெக்ஸ் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு தடையின்றி குடிநீர் கிடைக்கிறது. இதில், பூஞ்சேரி பகுதிக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, ஓஎம்ஆர் சாலை, கல்பாக்கம் சாலை, பொதுப்பணித்துறை சாலை உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடுகள் போல் காணப்படுவதாகவும், இதனால் மாமல்லபுரம் நகராட்சியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து, நீராதாரத்தை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற நகராட்சி பெண் ஆணையர் அபர்ணா நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, முதற்கட்டமாக பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அருகே திருக்கழுக்குன்றம் சாலையோரத்தில் முளைத்துள்ள சீமை கருவேல மரங்களை நகராட்சி தூய்மை ஆய்வாளர் குருசாமி தலைமையில், பொக்லைன் இயந்திரம் மூலம் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

மாமல்லபுரம் நகராட்சியில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது கருதியும், நீராதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், சாலையோரம் முளைத்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கியுள்ள நகராட்சி பெண் ஆணையரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாமல்லபுரம் நகராட்சியாக செயல்பட தொடங்கி, ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டது. 6 ஆணையர்கள் பொறுப்பேற்று, வெவ்வேறு பகுதிகளுக்கு இடமாற்றமாகி சென்று விட்டனர். ஆனால், யாரும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. 7வது, ஆணையராக பொறுப்பேற்ற அர்பணா, நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில், சீமை கருவேல மரங்களை அகற்றி வருகிறார் என்றனர்.

Related Stories: