×

பள்ளி, கல்லூரிகளில் அத்துமீறும் தவெகவினர் மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டும் தவெகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

சென்னை: தவெகவினர் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அத்துமீறிவரும் நிலையில், மாணவர்களை அரசியல் ரீதியாகச் சுரண்டும் தவெகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெகவினர் தொடர்ச்சியாகப் பள்ளி, கல்லூரி வளாகத்திற்கு அத்துமீறிச் சென்று முதல்வர் விஜய்யின் புகைப்படங்களைக் காட்டி மாணவர்களிடம் பேசுவது போன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்துக்காக தவறாக பயன்படுத்தி மாணவர்களை அரசியல் ரீதியாகச் சுரண்டும் தவெகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தவெக நிர்வாகிகள் நுழைந்து, தங்கள் கட்சி தலைவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

தலைவருக்கு ஆதரவாக விஜய் அண்ணா, விஜய் மாமா என மாணவர்களை வாழ்த்து கோஷங்கள் எழுப்பச் செய்து வருகின்றனர். தேசிய தலைவர்கள் புகைப்படங்களுடன், தவெக தலைவர் படத்தையும் காட்சிப்படுத்துகின்றனர். கல்வி நிறுவனங்களில் சினிமா பாடல்கள் பாடப்படுகின்றன எனச் சமூக ஊடகங்கள், ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரத்துக்காக தவறாக பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாகச் சுரண்டும் தவெகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் புகார் அனுப்பி உள்ளது. அரசியல் சாசன விதிகளையும், கல்வி உரிமை சட்ட விதிகளையும் மீறி செயல்படுவது குறித்து உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்நிகழ்வுகளை அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரங்களை தடை செய்து, விதிமுறைகளை வகுக்க வேண்டும். தவெகவின் இந்த செயல்பாடுகள் பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் சூழலுக்கு இடையூறாக உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Tags : Madras High Court ,Chennai ,
× RELATED பழம்பெரும் பின்னணி பாடகி...