செஞ்சி: விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு,மறியல் போராட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நாட்டார்மங்கலத்தில் நடந்தது. அங்கு வந்த மாவட்ட செயலாளர் பசுபதியை, சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கண்டித்து கோஷமிட்டனர்.
சி.வி.சண்முகத்தின் பெயர் போடாமலும் ஒன்றிய செயலாளரை அழைக்காமலும் கூட்டம் நடத்த விடமாட்டோம் என தகராறில் ஈடுபட்டனர். அப்போது பசுபதி ஒழிக என கோஷமிட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. திருமண மண்டபத்தின் கேட் பூட்டப்பட்டிருந்ததால் பசுபதி தரப்பினர் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அவர்கள் கூட்டம் நடத்தியபோது சி.வி.சண்முகம் தரப்பினர் உள்ளே நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை மண்டபத்தில் இருந்து பசுபதி தரப்பினர் அடித்து துரத்தினர்.
பதிலுக்கு சேர்களை தூக்கி எறிந்தபடி அவர்கள் வெளியேறினர். தொடர்ந்து பசுபதி கூட்டம் முடிந்து விழுப்புரம் சென்று கொண்டிருந்த போது செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சி.வி.சண்முகம் தரப்பு அவர் கார் மீது கல் வீசி தாக்கினர். இதில் பசுபதி அதிஷ்டவசமாக தப்பினார். இதனை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செஞ்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர். மாவட்ட செயலாளர் பசுபதி கூறுகையில், தவெக, பாமக, பாஜ கட்சிகளில் அவரை சேர்க்காததால் அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார். அடியாட்களை வைத்து மிரட்டியும், தாக்கியும் வருகிறார். சி.வி. சண்முகத்தின் பேச்சை கேட்காமல் அதிமுகவினர் எங்களுடன் சேர வேண்டும், என்றார்.
இதுபற்றி செஞ்சி காவல்நிலையத்தில் பசுபதி அளித்துள்ள புகாரில் சி.வி.சண்முகம் தூண்டுதலின் பேரில் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட சிலர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
