×

பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் ரூ.2 கோடிக்கு தனியாருக்கு முறைகேடாக பதிவு: தவெக அரசு மீது பக்தர்கள் குற்றச்சாட்டு

பழநி:திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம், ஆண்டன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி என கோயில் தரப்பில் கூறுகின்றனர். இந்த இடம் பழநி அருகே பாலசமுத்திரத்தை சேர்ந்த குப்புசாமி மணியக்காரர் என்பவரால் கோயிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளை பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது. தண்டபாணி ஐயா என்பவர் விற்பனை செய்ய முற்பட்டதால், இந்து சமய அறநிலையத்துறை மூலம் பழநி கோயில் இணை ஆணையர் மடத்தின் தக்காராக நியமிக்கப்பட்டார். இந்த இடத்தை பாதுகாக்கும் விதமாக கடந்த 2025, செப்டம்பர் மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக இலவச வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டது.

பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த நிலத்திற்கு தக்காராக பழநி கோயில் இணை ஆணையரே இருக்க நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. இந்த இடம் தற்போது திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் தனிநபர்கள் 2 பேரின் பெயர்களில் ரூ.2 கோடிக்கு கடந்த 6ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான நிலையில், அந்த பணியிடத்திற்கு வந்த இணை சார்பதிவாளர் பத்திரம் பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.

தவெக ஆட்சி பொறுப்பேற்றப் பின் இந்த சம்பவம் நடந்திருப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் பத்திரப்பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பத்திரப் பதிவுத்துறையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

* ‘பழநி ஆண்டவருக்கே அரசு மொட்டை’
இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் ராம.ரவிக்குமார் கூறுகையில், ‘‘பழநி கோயிலுக்கு சொந்தமான இடம் பழநி ஆண்டவருக்கே தெரியாமல் கிரயம் செய்யப்பட்டுள்ளது. மாற்றம் தருகிறோம் என்ற சொன்ன விஜய் அரசு பதவியேற்ற பின்பு கடந்த 6ம் தேதி தான் இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது. பழநி ஆண்டவருக்கே தவெக அரசு மொட்டை போட்டுள்ளது’’ என்றார்.

Tags : Palani Math ,Thavega government ,Palani ,Dandapani Swamigal Math ,Andan Park Road, ,Palani Adivaram, Dindigul district ,Balasamudram… ,
× RELATED ஓசூரில் வீடியோ பதிவிட்டு பள்ளி மாணவன்...