திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி

சென்னை: 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. – சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த பின்னணியில் குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது; மனுதாரர் தரப்பில், தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு.

இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம், 1967 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு வரப்பெறவில்லை.

அதனால், இந்த வழக்கில் நிலைபாட்டை தெரிவிக்க இயலாது என தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என தெரிவித்தார். முதல்வர் விஜய் சார்பில், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் வாக்காளராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தால், எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்? நிலுவையில் வழக்குகள் இல்லாதபோது ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் தான். அதே நேரத்தில் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அங்கே எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியும்?

இடைத்தேர்தலில் புதிய வேறு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது? அதனால் சற்று பொறுத்திருந்துப் பார்க்கலாம்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்வர் விஜய் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிட ஆயத்தம் ஆகி வந்த கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு கட்சி தாவிய அதிமுக பிரமுகர்களுக்கு ஐகோர்ட் உத்தரவால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, விராலிமலை.

Related Stories: