சென்னை: தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தற்போது திறக்க இயலாது என்றும், தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததாக எனக்குத் தெரியவில்லை எனவும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறி இருந்தார்.
தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டைப் பெற்றுத்தருவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கேட்டு கொண்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஜூன் மாதம் 9.91 டி.எம்.சியும், ஜூலை மாதத்தில் 32 டி.எம்.சியும் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், தவெக அரசும், அவர்களுடன் அமைச்சரையில் பங்குக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இந்த விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டைப் பெற்று தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
