- ஆதவ் அர்ஜுனா
- கரூர்
- ஆர் பாரதி
- சிபிஐ
- புது தில்லி
- விஜய்
- முதல் அமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- வெற்றி கலகம்
- கரூர் மாவட்டம், வேலுசாமிபுரம்
புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யும், தற்போதைய முதல்வருமான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக விஜய் மூன்று முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியான அஜய் ரஸ்தோகியின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.கவில் இணைந்த விழாவின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதாவது, எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது. அதனை முடிக்காமல் விட மாட்டோம்.
குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு காவல்துறையையும், திமுகவும் தான் முக்கிய காரணமாக இருந்தனர் என்று தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாகியது. இதை தொடர்ந்து மேற்கண்ட விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராகவும், அவர் மீது சிபிஐ வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமில்லாமல்,
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர எந்த தடையும் கிடையாது என்றும், அதேபோன்று கரூர் விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவிடம் உங்களது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யலாம் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கரூர் விசாரணை கமிட்டியின் தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியுமான அஜய் ரஸ்தோகிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பி வைத்திருந்தார். அதில், ‘‘அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் விகாரத்தில் அப்போதைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மீதும், காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டை திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். ’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் வழக்கை கண்காணிக்கும் தலைவரான உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவை கரூர் உயிரிழப்பு சம்பவ வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.யின் புலன்விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழு தலைவரின் இந்த பரிந்துரையை சிபிஐ அதிகாரிகள் உடனடியாக பரிசீலனை செய்யும் பட்சத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
