சென்னை: வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் “கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்” என்ற திட்டத்தை இன்று (08.07.2026) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் காணொலி வாயிலாக விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தளத்தில் தீர்வு வழங்கும் வகையில், மாநில அளவிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளான தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால் வளம், மீன்வளம், பட்டு வளர்ச்சித்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மண்டல வானிலை மையம், சென்னை மற்றும் வங்கி நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இன்று மாநில அளவிலான நிபுணர் குழு (SLEC), காணொலி வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 25 விவசாயிகளுடன் கலந்துரையாடி விவசாயிகளுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்தனர். இந்நிகழ்வு மாநிலத்தின் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இணைய ஒளிபரப்பு (Webcasting) செய்யப்பட்டது.
இத்திட்டத் துவக்க விழாவில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் முனைவர் பொ. சங்கர் இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் சந்திர சேகர் சாகமூரி இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் முனைவர். க. வீ. முரளிதரன், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் முனைவர் ஜெ. விஜயா ராணி இ.ஆ.ப., முனைவர் ப. சங்கரலிங்கம் இயக்குநர், சமிதி ஆகியோர் நேரிலும் மற்றும் மாநில நிபுணர் குழு உறுப்பினர்கள், மாவட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
