நத்தம், ஜூலை 8: நத்தத்தில் மண்பானை தயாரிக்கும் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பானைகள், விளக்குகள் சேதமடைந்தன. நத்தம் மீனாட்சிபுரம் எம்ஜிஆர் நகரில் முருகன் என்பவருக்கு சொந்தமாக மண்பானை தயாரிக்கும் தொழிற்கூடம் உள்ளது. தகரம் மற்றும் தென்னங்கீற்றுகளால் ஆன இந்த தொழிற்கூடத்தில் மண்பானைகள், அகல் விளக்கு போன்ற மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் பணி முடிந்து பணியாளர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென இந்த மண்பானை தொழிற்கூடம் தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், இந்த தீவிபத்தில் மண் பானைகள், மின்மோட்டார் உள்பட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
