உசிலம்பட்டி, ஜூலை 8: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று ஆய்வு செய்தார். இதன்படி பெரிய செம்மேட்டுப்பட்டி கிராமம் அருகில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அவர், பணிகளின் முன்னேற்றம், தரம் குறித்து கேட்டதுடன், விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
பின்னர் நடுப்பட்டி ஊராட்சியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். உத்தப்பநநாயகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெயர் பதிவு செய்யும் இடம், நோயாளிகள் பிரிவு, உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், சார் ஆட்சியர் உத்கர்ஸ் குமார், குண்டாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மொக்கமாயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
