×

தமிழகத்தின் வளர்ச்சி பாதாளத்தில் செல்கிறது: கேஆர்.பெரியகருப்பன் பேச்சு

 

திருப்புத்தூர், ஜூலை 8: திருப்புத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கணேசன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், புலவர் செவ்வந்தியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்புத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘‘ஓராண்டு, இரு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பதற்காக இயக்கங்கள் தொடங்குவதை போல் அல்லாமல், சமுதாய சீர்திருத்த இயக்கமாக திமுகவை அண்ணா தொடங்கினார்.

மற்ற இயக்கங்களைப் போல ஆட்சிக்கு வரவேண்டும் என்று தொடங்கப்பட்ட இயக்கம் திமுக அல்ல. ஆனாலும் ஆட்சிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்களை தொடக்க காலத்தில் அண்ணா பின்பற்றியது போல கலைஞரும் பின்பற்றினார். இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கிறவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா? அவர்கள் நிறைவேற்றினோம் என்று சொன்னால் இரண்டு வாக்குறுதிகள் மட்டும்தான், அந்த இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டது என்று சொல்ல முடியாது. மக்களை ஏமாற்றுகின்ற வகையிலே அந்த அறிவிப்புகள் அரசாணையாக வந்திருக்கிறது.

200 யூனிட் மின்சாரம் சலுகை அனைவருக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு செய்தார்கள். ஆனால் அந்த சலுகை யாருக்கும் கிடைக்கவில்லை.  சலுகைகளை எதிர்பார்த்த மக்களுக்கு இப்பொழுது மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்திருகின்ற காரியத்தை இந்த புதிய அரசு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தாண்டி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற அரசாக இந்த ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி இரண்டு மாத காலத்தில் இவ்வளவு பெரிய ஏமாற்றங்கள். இன்னும் தொடர்ந்து இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கிறதோ அவ்வளவு காலம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவார்கள். தமிழகத்தின் வளர்ச்சி பாதாளத்தில் போகும் என்று முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

கூட்டத்தில், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.எஸ். நாராயணன், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

 

Tags : Tamil ,Nadu ,KR. Periyakaruppan ,Tiruputhur ,District Council ,Ganesan ,former ,Minister ,Thennavan ,District Deputy Secretary ,Sengaimaaran ,Sevvanthiyappan ,
× RELATED அழகர் மலையில் குட்டியுடன் கரடி உலா