×

ராமநாதபுரம் ஜிஹெச்சில் ஓடிபி நடைமுறையால் பரிதவிக்கும் நோயாளிகள்: நீண்டநேரம் காத்திருக்கும் அவலம்

 

ராமநாதபுரம், ஜூலை 8: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஓடிபி முறையால் ஓபி சீட் (புறநோயாளிகள் பிரிவு டோக்கன்) பெற முடியாமல் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை பெற முடியாமல் ஏழை எளிய மக்கள் பரிதவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், மகப்பேறு கால பரிசோதனை, பிரசவம், விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு, முடநீக்கியல் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, மனநலம், காசநோய், தொழுநோய், எச்.ஐ.வி, குழந்தைகள் நலன், எலும்பு முறிவு, சித்தா, ஹோமியோபதி, யுனானி, கண், பல், மனநலம் உள்ளிட்ட பல மருத்துவ பிரிவுகள், டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனைகளில் நகராட்சி பகுதிகள், சுற்று வட்டார கிராமமக்கள், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்கள், சுற்றுலா மற்றும் பல்வேறு காரணமாக வரும் வெளிமாவட்டத்தினர் என நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 100 முதல் 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்களே அதிகமாக வருகின்றனர். இதற்காக மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் ஓபி சீட் (புறநோயாளிகள் பிரிவு டோக்கன்) பெறுவதற்கு டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி எண் எனப்படும் கடவுச் சொல் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் முதியோர், செல்போன் இல்லாதோர், ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காதவர்கள் ஓடிபி எண் இல்லாமல் பெயர் பதிவு செய்ய முடியவில்லை. மேலும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் மருத்துவமனை வரும்போது ஆதார் கார்டு இல்லாமல் வருகின்றனர். இதனால் பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை மருத்துவமனை வந்த பிறகு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சுமார் 1 முதல் 2 மணி நேரம் காத்து கிடந்து யாரேனும் வந்து உதவி செய்தால் மட்டுமே பெயரை பதிவு செய்து மருத்துவ பரிசோதனை, சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இது போன்ற சிரமத்தால் நாள் தோறும் குறைந்தது 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்று வருகின்றனர்.

இதனால் ஏழை எளிய மக்களின் நம்பிக்கைக்குரிய புகலிடமான அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்காமல் பாதிப்புள்ளாகி வருவது வேதனையாக உள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் எளிதான முறையில் பதிவு சீட்டு பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ramanathapuram ,GH ,Ramanathapuram Government Medical College ,
× RELATED அழகர் மலையில் குட்டியுடன் கரடி உலா