ராமேஸ்வரம், ஜூலை 8: இலங்கையில் கலவரம் நடந்த நீர்கொழும்பு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என ஏஐடியுசி மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. தலைநகா் கொழும்பிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள நீா்கொழும்பு நகரில் அமைந்த இச்சிறையில் 1,800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, திங்கள் கிழமை கலவரம் வரை நீடித்தது.
வன்முறையின்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட சுமார் 700 கைதிகளில் பல வெளிநாட்டினரும் அடங்குவர். இச்சம்பவம் குறித்து விசாரிக்கவும், இது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூவர் கொண்ட குழுவை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் செந்தில்வேல் கூறியிருப்பதாவது, இலங்கை நீர்கொழும்பு சிறைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.
கலவரம் தொடர்பாக இந்திய மீனவர்களின் நிலை என்ன என்பது குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட வேண்டும். எனவே, இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி, சிறைகளில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், தற்போதுள்ள அசாதாரண மற்றும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் இந்திய மீனவர்களை விரைந்து விடுவித்து தாயகம் திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
