இரவு நேரங்களில் ராமேஸ்வரத்தில் தொல்லை தரும் மது பிரியர்கள்

 

ராமேஸ்வரம், ஜூலை 8: மதுப்பிரியர்களால் இரவு நேரங்களில் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களுக்குள் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ராமேஸ்வரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடந்து வருகிறது. குடிமகன்களுக்குள் அடிக்கடி ஏற்படும் தகராறால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்.

குறிப்பாக ரயில்வே வடக்கு, காந்திநகர், லெட்சுமண தீர்த்தம், கோயில் கார் பார்க்கிங், துறைமுக வீதி, சங்குமால் கடற்கரை, மார்க்கெட் தெரு, தீயணைப்பு நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் மதுப்பிரியர்களின் அட்டூழியத்தால் இரவு நேரத்தில் உள்ளூர் மக்கள் வெளியில் செல்ல தயக்கம் காட்டும் நிலை உருவாகியுள்ளது. இரவில் தெரு சாலைகள், மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் அமர்ந்து குடிப்பதால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் முகம் சுளிக்கின்றனர். குறிப்பாக லெட்சுமண தீர்த்தம் கோயில் பகுதி மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இரவு பத்து மணிக்குள் மேல் சமூக விரோதிகள் தெருக்களுக்குள் சாலையில் ஆட்டோவில் அமர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் சமூக விரோதிகள் பொதுமக்கள் இடையே தகராறு ஏற்படுகிறது. இளைஞர்கள் பைக்குகளில் குரூப்பாக தெரு சாலையில் அணிவகுத்து செல்வது, நடுவே நிறுத்தி வைத்து ரீல்ஸ் எடுப்பது, சிகிரெட் பிடிப்பது, மது அருந்துவது என பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். இளைஞர்களின் இது போன்ற அத்துமீறல் செயல்களால் கேங் மோதல்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே ராமேஸ்வரம் போலீசார் இரவு நேரத்தில் தெருக்களுக்குள் அடிக்கடி ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குறிபிட்ட தெருக்களில் இரவு 7 முதல் 12 மணி வரை ஐந்து மணி நேரம் தீவிர ரோந்து கண்காணிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: