ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உயரமான வேகத்தடைகளால் அடிக்கடி விபத்து: சீரமைக்க வலியுறுத்தல்

ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்டது ஸ்ரீராமபுரம், குமாரபாளையம், கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகள். செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் இந்த கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக, மதுரை, பழநி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான டூவீலர்கள் கார்கள், வேன்கள் பஸ்கள், லாரிகள் உள்ளிட்டவை சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் இந்த சாலையை வழியாக பயணிக்கின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் ஒரு சில வேகத்தடைகள் அதிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வேகத்தடையை குறிக்கும் எச்சரிக்கும் பலகைகள், பிரதிபலிப்பு வண்ணப் பூச்சுகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் கார்கள் போன்ற வாகனங்களில் அதி உயர வேகத்தடைகளை கடந்து செல்ல சிரமமடைகின்றன. மேலும் வேகத்தடை குறித்த எச்சரிக்கை பலகைகள் மற்றும் அவற்றின் மீது இரவு நேரத்தில் ஒளிரும் வண்ணப்பூச்சுகள் பூசப்படாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடையை கவனிக்காமல் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே தவறி விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் நடந்த விபத்துக்களில் காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி, இந்திய சாலை பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப வேகத்தடைகளின் உயரத்தை சீரமைப்பதுடன், எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பு வண்ணப்பூச்சுகள் மற்றும் இரவு நேர ஒளிரும் குறியீடுகளை உடனடியாக அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: